ஊட்டியில் ஆளுநர் கூட்டியுள்ள மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர்.
அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ள நிலையில் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்கவில்லை.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகை சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக சந்திரசேகர் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தி வருகிறார். நான்காவது ஆண்டாக, ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த 2 நாள் மாநாட்டில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என். ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உட்பட, 10 மசோதாக்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்துவது கடும் எதிர்ப்புகளை கிளப்பிவிட்டு உள்ளது. ஆளுநர் தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதலில் ஈடுபடுவதாக விமர்சிக்கப்பட்டது. துணைவேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தின.
மேலும், ஆளுநரின் செயல்பாட்டுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்கு ஆளுநர் மாளிகை தரப்பு, இது அதிகாரப் போட்டியில் நடக்கும் கூட்டம் அல்ல என்றும் ஜனவரி மாதத்தில் இருந்தே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாகவும் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவி நேற்றிரவு உதகை வந்தடைந்தார். இந்நிலையில், இன்று மாநாடு தொடங்கிய நிலையில், துணைவேந்தர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
பெரும்பாலான துணைவேந்தர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள மாநாட்டை புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் தமிழ்வேந்தன் உதகை துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் உள்ளவர்கள் யாரும் உதகை மாநாட்டுக்குச் செல்லவில்லை. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி ஆளுநர் நடத்தும் மாநாட்டை புறக்கணித்துள்ளார். அதேபோல, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் உதகை மாநாட்டை புறக்கணித்துள்ளார். கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரின்ஸ் பங்கேற்கவில்லை.
அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தனியார் பல்கலை. துணைவேந்தர்களும் ஆளுநர் நடத்தும் மாநாட்டை புறக்கணித்துள்ளதால் சலசலப்பு எழுந்துள்ளது.