எங்களை சீண்டினால் இதுதான் நடக்கும்… பலுசிஸ் விடுதலை இராணுவம் நடத்திய ரிமோட் கண்ட்ரோல் தாக்குதலில்10 பாகிஸ்தான் வீரர்கள் உடல் சிதறி பலி..!!

பலுசிஸ்தானில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தடை செய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை இராணுவம் நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

கடந்த செவ்வாய்க் கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியாகினர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தான் அதிகாரி வெளியேறவேண்டும் என்பது உள்ளிட்ட பாகிஸ்தான் எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

இந்தநிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிற்கு அருகிலுள்ள மார்கட் பகுதியில் இராணுவ வாகனத்தை நோக்கி பெரும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும், இதில் ராணுவ வாகங்னகள் முற்றிலும் அழிக்கப்பட்டது. அந்நாட்டு ஊடகங்களின்படி, இந்தத் தாக்குதல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (IED) மூலம் நடத்தப்பட்டது, இது இராணுவ வாகனத்தை முற்றிலுமாக அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்தப் பகுதி நீண்ட காலமாக பலூச் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளின் மையமாக இருந்து வருகிறது. இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. பலூசிஸ்தானின் சுதந்திரத்திற்காக பலூச் இராணுவம் கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது.

“ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக எங்கள் தாக்குதல்கள் முழு பலத்துடன் தொடரும்” என்று BLA செய்தித் தொடர்பாளர் ஜியாண்ட் பலோச் ஒரு அறிக்கையை வெளியிட்டார். பாகிஸ்தான் இராணுவ வாகனத் தொடரணி மீது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் IED குண்டு வீசப்பட்டு, எதிரி வாகனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அதில் இருந்த 10 வீரர்களும் கொல்லப்பட்டதாக அவர் தனது அறிக்கையில் எழுதியுள்ளார். கொல்லப்பட்ட வீரர்களில் சுபேதார் ஷாஜாத் அமீன், நைப் சுபேதார் அப்பாஸ், சிப்பாய் கலீல், சிப்பாய் ஜாஹித், சிப்பாய் குர்ராம் சலீம் மற்றும் பலர் அடங்குவர்.

பலூச் விடுதலை இராணுவம் 1970களில் உருவாக்கப்பட்டது, ஆனால் இந்த அமைப்பு இடையில் சிறிது காலம் மூடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில், மீண்டும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தொடங்கியது. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகு, தாங்கள் ஒரு தனி நாடாக வாழ விரும்பினோம், ஆனால் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டதாக பலுசிஸ்தானில் உள்ள பலர் நம்புகிறார்கள். பலூச் விடுதலை இராணுவம் தொடர்ந்து சுதந்திரம் கோரி பாகிஸ்தான் இராணுவத்தைத் தாக்கி வருகிறது. ஊடக அறிக்கைகளின்படி, BLA 6000 க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொண்டுள்ளது, இதில் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர்.