61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம்… களையிழந்து கிடக்கும் காசிமேடு மீன் மார்க்கெட்.!!

ந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜீன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இதனால், கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் தங்களது படகுகளுக்கு வண்ணம் தீட்டுவது, வலைகளை சரி செய்வது என்பன உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவர். இதேபோல, காசிமேடு துறைமுகத்தில் படகுகள், வலைகள் ஆகியவற்றை பராமரிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறிய படகுகள் வைத்துள்ள மீனவர்கள் மட்டுமே சிறிது தூரம் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் விற்பனைக்கான மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளன. இதனால், மீன்கள் பிரியர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும், இதற்கு மாற்றாக குளத்து மீன்களை நாடிச் செல்கின்றனர்.

இதேபோல, சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது. குறிப்பாக பெரிய அளவிலான மீன்களைத் தவிற சிறிய அளவிலான மீன்கள் மட்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரமும் இதே நிலை காணப்பட்டது. தற்போது, 2-ஆவது வாரமாக இன்று (ஏப்ரல் 27) காசிமேடு மீன்சந்தை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சிலரே சிறிய அளவிலான மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.