சென்னை: தமிழகம் முழுவதும் 77 மாவட்ட அமர்வு நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: அரசு சொத்தாட்சியர் மற்றும் நிர்வாக அறங்காவலராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்கேஸ்வரன், மயிலாடுதுறை மாவட்ட நீதிபதியாகவும், சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் நீதிபதி டி.சந்திரசேகரன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன், சென்னை 8-வது சிபிஐ நீதிமன்ற நீதிபதியாகவும், அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்.ஈஸ்வரன், சென்னை 9-வது சிபிஐ நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை 2-வது பெருநகர கூடுதல் நீதிபதி எஸ்.தஸ்னீம், திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதியாகவும், சென்னை 16-வது பெருநகர கூடுதல் அமர்வு நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன், வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கே.காயத்ரி, வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 5-வது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.காஞ்சனா, திருவண்ணாமலை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாகவும், கோவை மாவட்ட 3-வது கூடுதல்அமர்வு நீதிபதி எஸ்.பத்மா, சென்னை போக்சோ சிறப்பு நீதிபதியாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.மலர்விழி, பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், அங்கு பணிபுரிந்த நீதிபதி கே.எச்.இளவழகன், கரூர் மாவட்ட அமர்வு நீதிபதியாகவும், அங்கு பணிபுரிந்த மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் (தடா) அமர்வு நீதிபதியாகவும், அங்கு பணிபுரிந்த கூடுதல் நீதிபதி கே.கீதா ராணி, சென்னை பெருநகர மூன்றாவது கூடுதல் நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் (தடா) அமர்வு நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி, 4-வது கூடுதல் அமர்வு நீதிபதியாகவும், அங்கு பணிபுரிந்த நீதிபதி வி.பாண்டிராஜ் 6-வது கூடுதல் அமர்வு நீதிபதியாகவும், அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்.முருகேசன், 7-வது கூடுதல் அமர்வு நீதிபதியாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 77 அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.