பத்ம விருது… நடிகர் அஜித், லட்சுமிபதி, அஸ்வின் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்..!

புதுடெல்லி: நடிகர் அஜித் குமார், லட்சுமிபதி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது.

இதில் பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேர், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல்கட்டமாக, 71 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மீதம் உள்ள 68 பேருக்கு வேறு ஒரு நாளில் விருதுகள் வழங்கப்படும்.

இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், வயலின் கலைஞர் டாக்டர் எல்.சுப்ரமணியம், மலையாள எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர் (மறைவு), சுசூகி மோட்டார் முன்னாள் சிஇஓ ஒசாமு சுசூகி (மறைவு), டாக்டர் துவ்வுர் நாகேஸ்வர ரெட்டி ஆகிய 4 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.

பிரபல தமிழ் நடிகர் அஜித் குமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், அஜித் குமார் மனைவி ஷாலினி மற்றும் அவர்களுடைய குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதுபோல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, திரைப்பட இயக்குநர் சேகர் கபூர், பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி (மறைவு), பங்கஜ் ஆர்.படேல், வினோத் குமார் தாம், டாக்டர் ஜோஸ் சாக்கோ பெரியப்புரம், டாக்டர் ஏ.ஏ.சூர்ய பிரகாஷ், ஸ்ரீஜேஷ், பங்கஜ் கேஷுபாய் உதாஸ் (மறைவு) ஆகிய 10 பேர் நேற்று பத்ம பூஷண் விருதை பெற்றுக் கொண்டனர்.

ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (ஸ்தபதி), முனைவர் லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கே.தாமோதரன் (செப்), பாடகர் அரிஜித் சிங், கணேஷ்வர் சாஸ்திரி திராவிட், டாக்டர் ஷ்யாம் பிஹாரி அகர்வால், பேராசிரியர் நிதின் நோரியா, ஸ்டீபன் நாப், ஷீன் காப் நிஜாம் உள்ளிட்ட 57 பேர் நேற்று பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டனர்.

பத்ம விருதுகளைப் பெற்றவர்கள் இன்று தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். இதையடுத்து. குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் பிரதமரின் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க உள்ளனர்.