பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் திடீரென இந்திய வம்சாவளி வேட்பாளரான ரிஷி சுனக் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும், பிரிட்டான் பிரதமருமான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளது. கட்சித் தலைவருக்கான போட்டியில் பங்கேற்பவர்களில் அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்குமோ, அவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே பிரிட்டனின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்படுவார்.
அவ்வகையில், தற்போது பிரதமர் பதவிக்கான போட்டியில், பென்னி மோர்டாண்ட், லிஸ் ட்ரஸ், கெமி பேடனோக், ரிஷி சுனக், மற்றும் டாம் டுகெந்தாட் ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு பல சுற்றுகளாக நடைபெறும். அதாவது, கடைசிப் போட்டியில் இரண்டு பேர் மிஞ்சும் வரை வாக்கெடுப்பு நடைபெறும். அப்படி இதற்குமுன் நடந்த வாக்கெடுப்புகளில் ரிஷி சுனக்கே முன்னிலை பெற்றுவந்தார்.
இதற்கிடையில், தான் பிரதமர் பதவியை இழக்க ரிஷிதான் காரணம் என கருதும் போரிஸ் ஜான்சன், ரிஷியை ஆதரிக்கவேண்டாம் என தன் கட்சியினரை இரகசியமாக கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில், சனிக்கிழமை வெளியான கன்சர்வேட்டிப் கட்சியினருக்குள் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் திடீரென கட்சி உறுப்பினர்கள் கெமி பேடனோக்குக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த ஆய்வில், பங்கேற்ற 851 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களில் 31 சதவிகித உறுப்பினர்கள் கெமி பேடனோக்குக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து லிஸ் ட்ரஸ்ஸுக்கு 20 சதவிகிதத்தினரும், பென்னி மோர்டாண்டுக்கு 18 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவிக்க, இதுவரை முன்னணி வகித்துவந்த ரிஷிக்கு 17 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எந்த அளவுக்கு இந்த தகவல் உண்மையானது என்பது தெரியாத நிலையில், அப்படி திடீரென ரிஷி பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பாரானால், உண்மையாகவே அதன் பின்னால் போரிஸ் ஜான்சனின் சதித்திட்டம் இருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும்.