குரங்கு அம்மை: கோவையில் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்:- குரங்கம்மை பாதிப்பு 63 நாடுகளில் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்தியாவில் கேரளா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தின் சென்னை, கோவை ,மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் குரங்கம்மை பரவலால் பாதிக்கப்பட்ட 63 நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணித்து வருகிறது என கூறினார். கோவையில் காலை மற்றும் மாலையில் வரும் சர்வதேச விமானங்களில் 150 முதல் 170 பயணிகள் வருகிறார்கள், ஜூலை மாதத்தில் விமான பயணிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனாவோ குரங்கம்மை நோயோ கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் ஒரு ஆர்.டி பி சி ஆர் மையம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். யாரேனும் ஆறிகுறியுடன் வந்தால் அவர்களை தனிமை படுத்த ஒரு படுக்கை வசதியுடன் தனி அறை தயார் நிலையில் உள்ளது எனவும் கூறினார். மேலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையோ அல்லது பிற இடங்களிலோ பிரத்யேகமாக ஒரு வார்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குரங்கம்மைக்கென சென்னையை தொடர்ந்து கோவையிலும் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் படுத்தப்பட உள்ளது என கூறினார். குரங்கம்மை நோய் கண்டறிய தமிழகத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சென்னையில் கிங் ஆய்வு மையத்தை பயன்படுத்துவோம் என கூறினார். மேலும் கேரளா -தமிழகம் இடையே 13 இடங்களில் பொது பாதை உள்ளதாகவும் முகம் மற்றும் முழங்கையிலோ கொப்புளங்கள் இருந்தால் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வருகிற ஞாயிற்று கிழமை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட உள்ளதாக கூறினார். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் முறையாக செயபடுத்தபடவில்லை என்ற மத்திய நிதித்துறை இணை அமைச்சர் குற்றச்சாட்டு கூறியது குறித்த கேள்விக்கு, அவர் எந்த இடத்தில் தோய்வு என கூறினால் அதனை சரி செய்வோம் அது தெளிவில்லாத விஷயமாக கருதுகிறோம், என கூறினார். மேலும் மத்திய அமைச்சரை கடந்த மாதம் இரு முறை சந்தித்துள்ளோம். அப்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் நீங்கள் செயல்படுத்தும் முறையை எங்களுக்கு தாருங்கள் என கூறினார். மத்திய அமைச்சர் உலகளவிலான மாநாட்டிற்கு தமிழக சுகாதார துறை அமைச்சரான என்னை அழைத்திருந்தார், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிகிறது ஆனால் அது இணை அமைச்சர் தெரியாமல் பேசுகிறார் என கூறினார். உலகிலேயே தமிழகத்தில் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அவரவர் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது என கூறிய அவர், இதுவரை 81 வது லட்சத்தை தொட இருக்கிறோம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை பாதிப்பு இல்லாததால் குரங்கம்மை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. தற்போது பரவ துவங்கியுள்ளதால் பிரதான நகரங்களிலும் குரங்கம்மை நோய் குறித்த விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மழைக் காலம் துவங்கியுள்ளதால் கொசு புழுக்களை அதனை லார்வா நிலையிலேயே அழிக்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது.
பருவமழை வரும் போது டெங்கு நோய் வரும். ஆனால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.