மனைவியின் நிறுவனத்தில் ரூ.4.5 கோடி மோசடி: கள்ளக் காதலியுடன் கணவன் கைது
கோவை வீரபாண்டி பிரிவு பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜிசா. இவரது கணவர் ரஞ்சித் குமார். இவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ரஞ்சித் குமாருக்கு நிரந்தர வேலை இல்லாததால் ஜிஷாவின் தந்தைக்கு சொந்தமான ஸ்பேஸ் மேக்கர்ஸ் ரூபிங் சிஸ்டம் என்ற நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டெவெலப்மென்ட் மேனேஜராக பணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு பொது மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் நிறுவனத்தில் ஜிசா அவரது தாயார் ஸ்டெர்லி ஜெகதீசன், மற்றும் தம்பி ஜித்தேஷ் ஜெகதீசன் ஆகிய மூவர் உட்பட ரஞ்சித் குமாரும் பங்குதாரர் ஆனார். தொடர்ந்து நிறுவனத்தை ரஞ்சித் குமார் நடத்திக் கொள்வது எனவும ஆண்டுதோறும் வரவு செலவுகளை சரி பார்த்து லாபத்தினை பகிர்ந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக வங்கி கணக்குகள் மற்றும் நிறுவனத்தின் முழு அதிகாரத்தை ரஞ்சித் குமார் பெற்றார். முதல் ஐந்து வருடங்களில் நிறுவனத்தை சிறந்த முறையில் ரஞ்சித் குமார் நடத்தி வந்துள்ளார் .இதற்கிடையே கடந்த 2006 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவர் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதை அடுத்து ரஞ்சித் குமாருக்கும் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்த கலைச்செல்விக்குமிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பின்னர் இருவரும் அலுவலக வேலையாக வெளியூர் செல்வதாக கூறி பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளனர் .தொடர்ந்து கலைச்செல்வியை நிறுவனத்தின் நிதி நிர்வாக அதிகாரியாக ரஞ்சித் குமார் பணியில் பதவி உயர்வு வழங்கி , கலைச்செல்விக்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கி வந்தார். இதை எடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நிறுவனத்தில் சரியாக வரவு செலவுகள் சரியாக இல்லை என்பதை அறிந்த ஜிசா நிறுவனத்தின் உதவி மேலாளராக பொறுப்பேற்றார். ஆனால் ரஞ்சித் குமார் நிறுவனத்தின் எந்த வரவு செலவுகளையும் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இது அடுத்து 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவன நிர்வாக கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது நிறுவனத்திற்குரிய ஜிஎஸ்டி மற்றும் அனைத்து வரிகளையும் செலுத்தி விட்டதாகவும் தான் இனிமேல் நிறுவனத்தில் பொது மேலாளராக தொடரப்போவதில்லை என்றும் கூறி ராஜினாமா செய்து விட்டு ரஞ்சித் குமார் வெளியேறினார். இதை தொடர்ந்து ஜிசா மற்றும் அவரது குடும்பத்தார் வங்கி கணக்குகள் மற்றும் வரவு செலவுகளை சரிபார்த்தனர். அப்போது ரஞ்சித் குமார் மற்றும் நிதி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த கலைச்செல்வி, கலைச்செல்வியின் தாயார் சரோஜா ஆகிய மூவரும் கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாயை நிறுவனத்தில் இருந்து கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும் ஜிஎஸ்டி மற்றும் வங்கி கணக்கு தொழிலாளர்களின் பிஎஃப் கணக்கு ஆகியவற்றில் போலியாக கையொப்பம் போட்டு அதற்குரிய பணத்தை தங்களது வங்கி கணக்குகளில் மாற்றி உள்ளது கண்டறியப்பட்டது. மொத்தமாக நான்கு கோடி 50 லட்சம் ரூபாயை ஜிஎஸ்டி வரி செலுத்தியது மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செலுத்தியது போல போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இது குறித்து ஜிஷா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மோசடி செய்த பணத்திலிருந்து ரஞ்சித் குமார் தனியாக வீடு மற்றும் நிலங்களை வாங்கி இருந்ததும் கலைச்செல்வியும் அதேபோல சொந்தமாக வீடு கட்டி வருவதும் தெரிய வந்தது .இந்நிலையில் ரஞ்சித் குமாரும் கலைச் செல்வியும் தலைமறைவானார்கள். தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த ரஞ்சித் குமார் மற்றும் கலைச்செல்வியை நேற்று கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்த கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.