சென்னை: மாணவர்களை சொந்த பிள்ளைகளை போன்று பயிற்றுவிக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி சம்பவம் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு திருநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்த ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 100 சிறந்த கல்லூரிகளில், 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள். இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில், 21 தமிழ்நாட்டில் உள்ளது. 50 சிறந்த மருந்தியல் கல்லூரிகளில், 11 தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், 18 தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில், 16 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சார்ந்தவை என்று புள்ளிவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மூன்றாவது சிறந்த கலைக்கல்லூரி நம்முடைய சென்னை மாநிலக் கல்லூரிதான். சென்னை மாநிலமாக இருந்து தமிழ்நாடாக மாறியதால் தமிழ்நாடாக மாற்றப்பட்டதால் விளைந்த பயன்கள் இவை.
திமுக அரசு அமைந்ததால் ஏற்பட்ட பயன்கள் இவை. இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும், வயிற்றெறிச்சலாகவும் இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய ஆட்சியாக உருவாக்க நாம் அனைத்து வகையிலும் முயற்சித்து வரும் இந்த நேரத்தில், அனைவருக்கும் மன வருத்தம் ஏற்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவங்கள் அமைந்துள்ளன.கல்வி நிலையங்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் தங்களது சொந்தப் பிள்ளைகளாக நினைத்து அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். மாறாக, நடக்கும் எந்தச் செயல்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன். இந்தச் சோகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் சேர்ந்து சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளார்கள். வன்முறைகள் என்பது வளர்ச்சிக்கு எதிரானவை என்பதை அவர்கள் உணர வேண்டும். அமைதியான தமிழகம்தான் அனைவருக்குமான தமிழகமாக அமையும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.