கோவை கணுவாய் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பத்திரசாமி (வயது 20). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சத்தியமூர்த்தி என்பவருடன் கனுவாய்பாைளயம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் பத்திரசாமி மற்றும் சத்தியமூர்த்தி கனுவாய்பாைளயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். 2 பேரும் மதுகுடித்து விட்டு டாஸ்மாக் கடை அருகில் உள்ள மதில் சுவற்றில் அமர்ந்து இருந்தனர். அப்போது 4 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்களும் மதுகுடித்து விட்டு பத்திரசாமி அமர்ந்து இருந்த மதில் சுவற்றின் அருகே வந்தனர்.
அவர்களில் ஒருவர் திடீரென பத்திரசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து இறங்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தாங்கள் வைத்து இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரை சரமாறியாக தாக்கி குத்தினர்.
இதில் பத்திரசாமிக்கு தலை மற்றும் நெஞ்சில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்து பத்திரசாமி காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பத்திரசாமியை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் மூர்த்தி (38), ஆனந்தகுமார் (37), முருகேஷ் (39), ரவி (43) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.