கோவையில் கடந்த சில நாட்களாக சாரால் மழையும், பலத்த மழையும் பெய்து
வருகிறது. இதேபோன்று நேற்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதனால் கோவையில் உள்ள அவினாசி பாலம், வடகோவை பாலம், லங்கா கார்னர் உள்பட பலங்களின் அடியில் மழைநீர் தேங்கியது. பலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த நிலையில் கோவை ராம்நகரை சேர்ந்த குடும்பத்தினர் ராம்நகரில் இருந்து வடகோவையை நோக்கி காரில் வந்தனர். அவர்கள் ராம்நகர்- ஒரு தனியார் பள்ளிக்கும் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அடியில் மழைநீர் தேங்கி இருந்ததையும் பொருட்படுத்தாமல் வந்தனர்.
அப்போது அங்கிருந்த சில ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த
வழியாக செல்ல முடியாது என்றனர். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
இதனால் அந்த கார் பாலத்தின் அடியில் தேங்கி இருந்த தண்ணீரில் வசமாக
மாட்டி கொண்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அங்கு விரைந்து சென்றார். அவர் இடுப்பளவு தேங்கி இருந்த மழை நீரையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் இறங்கினார். பின்னர் அந்த காரில் இருந்த 2 குழந்தைகளையும், 3 பெண்களையும், 2
ஆண்களையும் பத்திரமாக மீட்டார்.
அவருக்கு போலீஸ் ஏட்டு சுகுமார் மற்றும் பொதுமக்கள் உதவி செய்தனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் செய்த செயலை கண்டு பொதுமக்கள்
வெகுவாக பாராட்டினர். இந்த நிலையில் காரை கவன குறைவாக ஓட்டிவந்ததால் அவர்களுக்கு ஆர்.எஸ்.புரம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும்
அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.