டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. மிக முக்கிய துறையான இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தரப்பு தொடர்ந்து புகார் வைத்து வருகிறது.
டெண்டர்களில் பல முறைகேடு நடந்து இருப்பதாக ஏற்கனவே அறப்போர் இயக்கமும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தது.
அதோடு எடப்பாடிக்கு நெருக்கமான நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையும், அதற்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத்துறையும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடுகளை செய்துள்ளதாக 2018லேயே திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது. பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து எடப்பாடி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. அதன்பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவே இல்லை. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு கடந்த 2 வாரம் முன் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, இன்று வழக்கை (ஆகஸ்ட் 2) விசாரிக்க போவதாக அறிவித்தார். இதையடுத்து வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இன்றைய விசாரணையை முன்னிட்டு ஆர். எஸ் பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முறைகேட்டு புகார் விவரங்கள் பின்வருமாறு –
வண்டலூர் – வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச் சாலை 715 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல் . திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச் சாலை விரிவாக்க 720 கோடி ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டது.