ஜனாதிபதி விருது தருவதாக: அமைச்சர் பொன்முடி மருமகளிடம் பணம் மோசடி – கோவை ஆசாமி சிறையில் அடைப்பு
கோவை கோவைப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் இக்னேஷியல் பிரபு. கோவை புதூர் பகுதியில் யூனிசெப் இன்டர்நேஷனல் கவுன்சில் டிரஸ்ட் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார் .சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் பெயரை போன்ற போலியான ஒரு அமைப்பை உருவாக்கி இவர் நடத்தி வந்துள்ளார். பல ஆண்டுகளாக புது பணக்காரர்கள் தொழிலதிபர்களை குறிவைத்து டாக்டர் பட்டம் வழங்குவது அமைதி புறா விருது வழங்குவது என பல லட்ச ரூபாய்களை வசூலித்து பிரபல நடிகர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு விருதுகள் வழங்குவது இவரது வழக்கம். இதில் ஏமாறும் தொழிலதிபர்களை குறி வைத்து இக்னேஷியல் பிரபு தொடர்ந்து மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஜனாதிபதி விருது, கவர்னர் விருது முதல்வர் விருது,ஜன சேவா புரஸ்கார் விருது உள்ளிட்ட பல விருதுகளை தருவதாக தொழிலதிபர்களிடம் ஆசை காட்டி இருந்தார். இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களிடம் இரண்டு லட்ச ரூபாய் 3 லட்சம் ரூபாய் என பல கோடி ரூபாயை வசூலித்துள்ளார். இதில் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்ததில் டாக்டர் கவிதா கௌதம் சிகாமணியும் ஒருவர். இவர் தமிழக அமைச்சர் பொன்முடியின் மருமகளும் கள்ளகுறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகாமணியின் மனைவி ஆவார். கவிதா கௌதம் சிகா மணிக்கு ஜனாதிபதி விருது தருவதாக கூறி இக்னேஷியல் பிரபு பணத்தை வாங்கியுள்ளார் .கவிதா கௌதம் சிகாமணியும் இதற்காக இரண்டு லட்ச ரூபாயை இன்டர்நேஷனல் யுனிசெப் கவுன்சில் என்ற பெயரில் டிடியாக எடுத்து கொடுத்துள்ளார். இதே போல சென்னையைச் சேர்ந்த டாக்டர் மணிலால், டாக்டர் கோபிகிருஷ்ணன், மதுரையைச் சேர்ந்த டாக்டர் விஜயராகவ், ஆகியோருக்கு ஜனாதிபதி விருது தருவதாகவும் தமிழக முதல்வர் விருதுக்கு என மதுரையைச் சேர்ந்த நாகேந்திரனுக்கு தமிழக கவர்னர் விருது வழங்குவதாக டாக்டர் வரதராஜன், தெலுங்கானா கவர்னர் விருதுக்கு சக்திவேல் என ஒன்பது பேரிடம் 14 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வசூலித்துள்ளார். ஆனால் பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் எந்தவித விருதும் அவர்களுக்கு வழங்குவதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இதை அடுத்து பணம் கொடுத்தவர்கள் இக்னேஷியல் பிரபுவிடம் தொடர்ந்து பல முறை கேட்டு வந்தனர் ஆனால் அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இதை எடுத்து அவர்கள் இக்னேஷியல் பிரபு நடத்தி வந்த நிறுவனம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் நடத்தி வந்த அமைப்பு போலியானது என்றும் இதே போல இந்தியா முழுவதும் பல தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மதுரை தாசில்தார் நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சலீம் ராஜா புகார் அளித்தார்.தொடர்ந்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இக்னேஷியல் பிரபு மோசடி பேர்வழி என்பது தெரிய வந்தது. இதற்காக தனது உதவியாளர் காயத்ரி என்ற பெண்ணுடன் சேர்ந்து ஏமாறும் தொழிலதிபர்களை குறி வைத்து பல லட்ச ரூபாயை வசூலித்ததும் தெரிய வந்தது. இதற்காக கோவை கோவை புதூர் பகுதியில் அலுவலகம் ஒன்றை எடுத்து நடத்தி வந்த இக்னேஷியல் பிரபு தனது சொகுசு காரின் முன் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கொடியை மாட்டி கொண்டு தேசிய பொதுச்செயலாளர் என்ற பலகையையும் வைத்து பந்தாவாக வலம் வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து குனியமுத்தூர் போலீசார் இக்னேஷியல் பிரபுவை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழக அமைச்சரின் மருமகளிடம் ஜனாதிபதி விருது வாங்கி தருவதாக கூறி கோவையைச் சேர்ந்த ஆசாமி வசூல் வேட்டை நடத்தி தற்போது கைதாகி சிறைக்கு சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.