நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பிரசாரத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும், அதன்படி நாடு முழுவதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசுஅலுவலகங்களில் வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை பறக்கவிடவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவர்ணக்கொடி உடனான பிணைப்பை மேம்படுத்தும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். 3 நாட்கள் வீடுகள் தோறும் தேசிய கொடிகள் ஏற்றப்பட உள்ளதால் தேசிய கொடிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. இதையடுத்து தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி பல இடங்களில் நடந்து வருகிறது.
அந்த வகையில் கோவையில் உள்ள டவுன்ஹால் பகுதியிலும் தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக தேசிய கொடி தயாரிக்கும் பணி களை கட்டியுள்ளது. இதுகுறித்து கோவை டவுன்ஹாலில் தேசிய கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சூலூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறியதாவது:- ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடிகள் தயாரிக்கும் பணியை கடந்த மே மாதமே தொடங்கி விட்டோம். தேசிய கொடிகளை கதர், காட்டன், பேப்பர்களில் அதிகளவில் செய்து வருகிறோம். இதுதவிர கதர் கூப்பர் காட்டனிலும் தேசிய கொடி தயாராகிறது
நாங்கள் 8×10 என்ற அளவு முதல் 15×30 அளவு வரையிலான தேசிய கொடிகள் தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் தேசிய கொடிகள் 5 ரூபாயில் இருந்து 2000 ஆயிரம் ரூபாய் வரைக்கு விற்பனையாகி வருகிறது. எங்களுக்கு கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஆர்டர்கள் வருகிறது. இதுதவிர தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 20 ஆயிரம் தேசிய கொடிகளை விற்பனையானது. இந்த ஆண்டு 4 லட்சம் தேசிய கொடிகளை தயாரித்து விற்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். இதற்கிடையே மத்திய அரசு 13-ந் தேதியில் 15-ந் தேதி வரை வீடுகளில் மக்கள் கொடியேற்றி கொள்வதற்கு அனுமதி கொடுத்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் பலரும் தேசிய கொடிகள் வாங்குவார்கள். இதுதவிர கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் தேசிய கொடி வாங்க உள்ளனர். இதனால் இந்த ஆண்டு தேசிய கொடி விற்பனை இன்னும் அதிகரிக்கும். நாங்கள் நிர்ணயித்துள்ளதை விட அதிகளவில் தேசிய கொடி விற்பனை நடைபெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் தேசிய கொடிகளை விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். கேரளாவுக்கு எப்போதும் 1 லட்சம் தேசிய கொடிகள் விற்பனையாகும். இந்த ஆண்டும் அதே போன்று 1 லட்சம் கொடிகள் விற்பனையாகும் என நினைக்கிறோம்.
மற்ற மாவட்டங்களும் அனுப்பி வருகிறோம்.குறிப்பாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆர்டர் வந்துள்ளது. தற்போது தேசிய கொடி தயாரித்து அங்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் தேசிய கொடிகள் மட்டுமின்றி, தேசிய கொடி சின்னத்தில் தொப்பி, பேக், சால்வை, பலூன், குடை போன்ற பொருட்களும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதுவும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதி கொடுத்துள்ள மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தேசிய கொடி தயாரிப்பவர்கள் மட்டுமின்றி, பலூன் தயாரிப்பவர்கள் இன்னும் பலருக்கு வேலை கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தேசிய கொடியை தயாரிப்பதில் எங்களுக்கு பெருமையாகவும், கவுரவமாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்