இணையதளம் மூலம் ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் நூதன மோசடி – 12 பேரை பெங்களூரில் வைத்து மடக்கிப் பிடித்த கோவை மாநகர போலீசார்
டேட்டிங் செயலி மூலம், ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் நூதன மோசடி தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், பெங்களூரில் பதுங்கியிருந்த 12 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கோவையில் உள்ள பீளமேடு பகுதியில் உள்ள தனியார் சர்வீஸ் அபார்மென்ட்டிற்கு பெண்களின் புகைப்படத்தை காட்டி, பல்வேறு ஆண்கள் அடிக்கடி முகவரி கேட்டு வந்துள்ளனர். இவ்வாறு, தொடர்ந்து பல்வேறு நபர்கள் பெண்களின் புகைப்படத்தை காட்டி அங்கு வந்ததால், சந்தேகமடைந்த சர்வீஸ் அபார்மென்ட் நிர்வாகி, மாநகர போலீசுக்கு புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், துணை கமிஷனர் சிலம்பரசன் தலைமையில் தனிப்படை அமைத்து ஆன்லைன் மூலம் மோசடி செய்து வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெங்களூரில் இருந்தபடி இணைய தளம் மூலம் ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த கும்பலை பிடிக்க பெங்களூரு விரைந்த தனிப்படையினர், 12 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். இது குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து, ஆன்லைன் சைபர் குற்றத்தின் கீழ் வரும் இந்த வழக்கு குறித்து தெரிவித்தார்.
பீளமேடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இணையதளம் மூலம் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 29ம் தேதி தனியாருக்கு சொந்தமான குடியிருப்பில் புகுந்த ஒரு சில இளைஞர்கள், பணத்தை திருப்பி கொடுங்கள் என குடியிருப்பில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இச்சம்பவத்தை விசாரித்த போலீசார், “லோகேண்டா” என்ற இணையதளம் மூலம், பாலியல் இச்சைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, துணை கமிஷனர் சிலம்பரசன் மற்றும் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆன்லைன் மூலம், பாலியல் தொழில் செய்வதாக பெண்களை செல்போன் வாயிலாக பேச வைத்து, ஆண்களிடம் பணத்தை சுருட்டிய தகவல் கிடைத்துள்ளது.
விசாரணையில், பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட இந்த கும்பல், பாலியல் தொழிலுக்கு பெண்கள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து, 12 பேர் கொண்ட கும்பலை, பெங்களூருவில் வைத்து, கோவையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 5 பேர் பெண்கள் ஆவர். அவர்களிடம் இருந்து 10 சிம்கார்டுகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
“லோகேண்டா” என்ற வலைத்தளத்தில் செல்போன் எண்களை பதிவு செய்த ஆண்களிடம் ஆன்லைன் மூலம் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இந்த கும்பலின் முக்கிய குற்றவாளியான, ரிஸ்வான் என்பவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையதளம் மூலம் ஆண்களிடம் பணத்தை வசூலித்து விட்டு, பின்னர் போலியான முகவரியை கொடுத்து பெண்கள் அங்கு இருப்பதாக வரச் சொல்லி ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கும்பலின் தலைவன் ரிஸ்வான், பெண்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலுக்கும் ஈடுபடுத்தியுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது.தொடர்ந்து கமிஷ்னர் கூறும்போது
கோவையில் கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்துள்ளோம். 360 டிகிரியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா அதிகளவில், கோவைக்கு கொண்டுவரப்படுகிறது. இது போக, கஞ்சா “சாக்லேட்” ராஜஸ்தானில் இருந்து வருகிறது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளனர்.
இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.