சண்டிகர்: பஞ்சாப் வேளாண் துறையில் ரூ.150 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் குல்தீப் சிங், மாநில வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.150 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாபில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 2018 முதல் 2022 வரையில் மத்திய அரசு சார்பில் பஞ்சாபுக்கு ரூ.1,178 கோடி மானியம் வழங்கப்பட்டது.
இந்த தொகையில் பஞ்சாபில் 90,422 வேளாண் கருவிகள் வாங்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
இதன்படி 90,422 கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 11,275 கருவிகள் மாயமாகி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி ரூ.150 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக பஞ்சாப் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.