கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து. இதில் ஜமேசா முபின் அதே இடத்தில் உடல் கருகி பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஜமேசா முபின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது ஜமாத்துகள் யாரும் முன்வரவில்லை. அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடக்கம் செய்ய முதலில் மறுத்திருக்கின்றனர். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் முபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்தது குறித்து தகவல் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அதனை ரீ டுவிட் செய்த கிஷோர் கே சாமி குண்டு ஒழுங்காக வைக்க தெரியாத நபரை ஜமாத்துக்கள் எப்படி அடக்கம் செய்வார்கள்? என்ற பொருளில் ட்விட் செய்திருக்கின்றார். இது பதட்டமில்லாத பகுதியில் ட்விட் குண்டை வீசுவதாக அமைந்திருக்கிறது. இதனால் இந்து -முஸ்லீம் இடையே சச்சரவு ஏற்பட வாய்ப்புக்கள் இருந்தது. இதனை அறிந்த மாநகர சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே சாமி மீது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்திய தண்டனைச் சட்டம் 153 பிரிவின் கீழ், கலகம் செய்வதற்குத் தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலவரத்தை தூண்டியவருக்கு ஒரு ஆண்டுக்கு மேற்படாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது சிறைவாசமும்- அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். என்று சைபர் கிரைம் அதிகாரிகள் கூறினார்கள்.