கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியில் உள்ள அய்யப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தனர்.இது நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது அங்கு பிறந்து 3 நாள் ஆன பெண் சிசுவின் உடல் கிடந்தது தெரிய வந்தது .இதையடுத்து பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் பச்சிளம் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. இதனால் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தையின் தாய் அந்த பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான வித்யா கவுரி (வயது 26) என்பதும் இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் வித்யா கவுரிக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலிண்டர் லாரி டிரைவரான ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது. அப்போது அவர்கள் 2 பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர் .மேலும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் வித்யாகவுரி கர்ப்பமானார் .இதையடுத்து இதுபற்றி அவர் ரமேசிடம் கூறியதாக தெரிகிறது. அப்போது அவர் கருவை கலைத்துவிடும்படி கூறியுள்ளார். வித்யா கவுரி அப்படி செய்யாமல் இருந்து உள்ளார் .இந்த நிலையில் வித்யா கவுரி கர்ப்பமாக இருப்பது அவர்களின் தாயார் புவனேஸ்வரிக்கு தெரிய வந்தது. இதை யடுத்து அவர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் .அங்கு மருத்துவரிடம் வித்யா கவுரியின் கருவை கலைக்க கேட்டுள்ளார். அப்போது டாக்டர் குழந்தை வளர்ச்சி அடைந்து விட்டதாகவும் , கருவை கலைக்க முடியாது என்று கூறினார்கள். .இதை யடுத்து தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் .இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வித்யா கவுரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு வீட்டில் வைத்து புவனேஸ்வரியும் அவரின் அக்கா பூபதி என்கிற அம்மணி ( வயது 54 )என்பவரும் பிரசவம் பார்த்து உள்ளார்கள். அப்போது சிறிது நேரத்தில் வித்யா கவுரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தை கதறி அழுததால் 2 பேரும் பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு வந்துள்ளார்கள். 3 நாட்கள் கழித்து கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. குழந்தையை கிணற்றில் வீசி புவனேஸ்வரியும், அவரது அக்கா அம்மணியும் கொலை செய்ததும் ‘இதற்கு உடந்தையாக வித்யா கவுரி இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு கிணற்றில் வீசிய புவனேஸ்வரி, அம்மணி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.வித்யா கவுரி போலீஸ் பாதுகாப்புடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குணமடைந்ததும் அவரும் கைது செய்யப்படுவார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.