கோவை போலீஸ் ஏட்டை கத்தியால் குத்தி தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு – 2 கால்களில் குண்டு பாய்ந்தது..!

நாகர்கோவிலில் உள்ள வாத்தியார்விளை அம்மன் கோவில் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஆல்வின் ( வயது 40) இவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்..இவர் இன்று அதிகாலையில் கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அங்கு விரைந்தனர். ஏட்டுக்கள் சந்திரசேகர், ராஜ்குமார், சசி ஆகியோர் ஆல்வினை துரத்திப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜ்குமாரை குத்தினார். இதில் ஏட்டு ராஜ்குமாருக்கு இடது மணிக்கட்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மற்ற காவலர்களை தாக்க முயற்சித்த போது சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தற்காப்பிற்காக தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் ஆல்வினுடை 2 கால் முட்டிகளிலும் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஆல்வின் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஏட்டு ராஜ்குமாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கோவையில் இன்று அதிகாலை 2 – 30 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.