கொள்ளையடித்த பணத்தை வைத்தே 4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய திருட்டு கும்பல் – போலீசாரேயே அதிர வைத்த சம்பவம்.!!

மிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 150 பவுன் தங்க நகைகள், லட்சக்கணக்கில் ரொக்கம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரத்தில் உள்ள வீட்டில் 56 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அருண்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆண்டாள்புரத்தில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் இக்கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. பிடிபட்ட இருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மூர்த்தியின் தாய் சீனித்தாய், மனைவி அனிதா பிரியா, லட்சுமி, மகாலட்சுமி, நாகஜோதி, மோகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து சுமார் 150 பவுன் தங்க நகைகள், ரொக்கமாக 2 1/2 லட்சம் ரூபாய், லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லட், கைப்பேசி உள்ளிட்ட ரூ. 84 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளை அடித்த நகைகளை விற்று அதன் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு சுமார் 4 கோடி ரூபாய்க்கு ராஜபாளையத்தில் ஒரு ஸ்பின்னிங் மில் வாங்கிய ஆவணங்களும் சிக்கியன.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கோவை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பெரும்பாலான கொள்ளை சம்பவங்களுக்கு மூர்த்திதான் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

சிக்கிய குற்றவாளிகள் 6 பேரும் மூர்த்திக்கு நகைகளை விற்றுக் கொடுப்பது மற்றும் துப்பு சொல்லும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவங்களுக்கு உதவியாக இருந்த 6 பேரை கைது செய்த இராஜபாளையம் போலீசார் தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர். செல்போன் சிக்னல் மூலம் தன்னை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மூர்த்தி செல்போனை பயன்படுத்தியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் கொள்ளையில் ஈடுபட்டு, அக்கொள்ளை பணத்தின் மூலம் ஸ்பின்னிங் மில் ஒன்றை வாங்கி அதை நடத்தி வருவது போலீசாருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.