நல்ல மனசு தான் கடவுள்… வயநாடு மக்களுக்காக… மொய் விருந்து வைத்த திண்டுக்கல் மக்கள்.!!

திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை , உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருளுதவிகளை அளித்து வருகின்றனர்.

வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல் பகுதி மக்களும் கைகோர்த்துள்ளனர். அவர்கள் மொய்விருந்து ஏற்பாடு செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை வயநாடு நிலச்சரிவு பகுதி மக்களுக்கு அனுப்பிய நெகிழ்ச்சி சம்பவம் நேற்று நிகழ்ந்தது.

திண்டுக்கல் ஹோட்டல் அசோசியேசன் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் சார்பில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் (முஜிப் பிரியாணி) வைத்து நேற்று (ஆகஸ்ட் 7) இரவு 8 மணி முதல் மொய் விருந்து நிகழ்வு நடைபெற்றது.

இந்த மொய் விருந்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களால் இயன்ற நிதி உதவிகளை அளித்தனர். இந்த மொய் விருந்தில் சிக்கன் பிரியாணி, தோசை, பரோட்டா ஆகியவை பரிமாறப்பட்டன.

இந்த மொய் விருந்தை ஏற்பாடு செய்த முஜிப் பிரியாணி கடை உரிமையாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வயநாடு நிலச்சரிவு ஓர் இயற்கை சீற்றம். இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து ஏற்பாடு செய்துள்ளோம். இதனை நம் முன்னோர்கள் சுய விருந்து என பின்பற்றி வந்தனர். இந்த மொய் விருந்தில் யார் எவ்வளவு நிதிஉதவி செய்கிறாரக்ள் என்று யாருக்கும் தெரியாது. வயநாடு மக்களுக்கு நம்மால் , நம் மக்களால் உதவி செய்ய வேண்டும் என இதனை ஏற்பாடு செய்தோம். எதிர்பார்த்ததை போல ஊர்மக்கள் திராளாக வந்து ஆதரவு தெரிவித்து உள்ளார்கள் என்று மொய் விருந்து ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.