வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்- தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு.!!

ங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் சனிக்கிழமை (அக்.19) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது, வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகா்ந்து இந்திய கடற்கரைப் பகுதியை விட்டு விலகிச்செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிகழ்வால், மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், வங்கக்கடல் காற்று மேற்கு நோக்கி ஈா்க்கப்படும்.

இதற்கிடையே, வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் வரும் அக்.22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்.24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல்சின்னம் வடக்கு நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக வானிலை நிலவரம்: மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், சனிக்கிழமை (அக்.19) முதல் வியாழக்கிழமை (அக்.24) வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை: அக்.20-ஆம் தேதி திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், அக்.21-இல் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், கடலூா், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோன்று, அக்.24-இல் கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.19, 20 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.