ஒற்றை காட்டு யானை தாக்கி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்..

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வனப் பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க இன்று மாலை ஏழு முப்பது மணி அளவில் சென்ற போது அங்கு வந்த காட்டு யானை எதிர்பாராத விதமாக தாக்கியதில் காயம் அடைந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின் வனப் பணியாளர்களால் ரங்கசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் காட்டு யானையை தனிக் குழுக்கள் அமைத்து கண்காணித்து வந்த நிலையில் அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவரை ஒற்றைக் காட்டு யானை தாக்கியது அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.