11 நதிகளை இணைத்து ரூ.40,000 கோடி முதலீட்டில் மெகா திட்டம் ராஜஸ்தானில் தொடங்கப்போகுது.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.
ராஜஸ்தானில் உள்ள 11 நதிகளை இணைக்கும் வகையில் சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 17-ஆம் தேதி அன்று தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் ராஜஸ்தானின் நீர் பற்றாக்குறையை குறைத்து விவசாய வளர்ச்சி, குடிநீர் வழங்கல், தொழில்துறைக்கு தேவைப்படும் நீர் வளங்களை சீராக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 நதிகளை இணைக்கும் அறிவிப்பை மத்திய நீர்வளத்துறை அமைச்சரான சி.ஆர்.பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். சுசி செமிக்கானின் செமி கண்டக்டர் ஆலை திறப்பு விழாவில் பேசிய பாட்டீல் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்ணீர் சேகரிப்பில் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது ராஜஸ்தான் நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 17-ஆம் தேதி அன்று தொடங்கயிருக்கும் 11 நதிகளை இணைக்கும் இந்தத் திட்டம் ராஜஸ்தானின் நீர் நெருக்கடியை குறைக்கும் என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் ஜனவரி 2024-ஆம் ஆண்டு ஜல் சக்தி அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளன. பர்பதி-கலிசிந்த்-சம்பால் (MPKC) இணைப்புத் திட்டம் மற்றும் ராஜஸ்தான் கால்வாய் திட்டம் போன்ற திட்டங்களுக்கான ஆரம்பகட்ட செயல்முறையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களின் மூலம் மத்திய பிரதேஷம் மற்றும் ராஜஸ்தானின் தண்ணீர் பற்றாக்குறை மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. MPKC இணைப்புத் திட்டம், முக்கிய நதிகளை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். அதாவது சம்பல் மற்றும் அதன் துணை நதிகளான பர்பதி, கலிசிந்த், குனோ, பனாஸ், பங்கங்கா, ருபரைல், கம்பீரி மற்றும் மெஜ் போன்ற முக்கிய நதிகளை இணைக்கும் திட்டமாகும். நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட தகவலின்படி, ராஜஸ்தானில் ஜலவார், கோட்டா, பூண்டி, டோங்க், சவாய் மாதோபூர், கங்காபூர், தௌசா, கரௌலி, பரத்பூர், அல்வார் போன்ற 21 புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் குனா, சிவ்புரி, ஷியோபூர், சேஹோர், ஷஜாபுர், ராஜ்கர், உஜ்ஜைன், மான்ட்சூர், மோரேனா, ரத்லாம், க்வாலியர் போன்ற மாவட்டங்களுக்கும் தண்ணீர் வழங்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் குடிநீர் வழங்குவது நீர் பாசனம் தொழில் துறைக்கு தேவைப்படும் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது