மும்பை தொழிலதிபருக்கு வந்த மெசேஜ்.. பதில் அனுப்பியதால் ரூ.40 லட்சம் மாயம்.. சிம் கார்ட் மூலம் நூதன மோசடி..!

சில நாட்களுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மொபைல் போனுக்கு இரவு நேரத்தில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

அதனை திறந்துபார்த்தபோது புதிய சிம் கார்டு கேட்டு விண்ணப்பித்திருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அவர் அப்படி ஏதும் விண்ணப்காத நிலையில், தான் புதிய சிம் கார்டு கேட்கவில்லை என்று கூறி அந்த மெசேஜ்க்கு தொழிலதிபர் பதிலளித்துள்ளார். ஆனால் காலையில் அவரின் சிம்கார்டின் சிக்னல் துண்டிக்கப்பட்ட நிலையில், சிம்கார்ட் உபயோகத்தில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

முன்னதாக அவர் தன் போனுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் கால் ஃபார்வேர்டு முறையில் மாற்றிவைத்திருந்ததால் அதனை சோதனை செய்து பார்த்தபோது பண பரிமாற்றத்துக்காக இரண்டு ஒன் டைம் பாஸ்வேர்டு வந்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் வங்கியில் விசாரித்தபோது அவரின் வங்கிக் கணக்கிலிருந்து எட்டு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.40 லட்சம் வேறு கணக்குகளுக்கு மாறியிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் சைபர் பிரிவு போலிஸாரிடம் புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்திய போலிஸார் பரிவர்த்தனை நிகழ்ந்திருந்த ஏழு வங்கிக் கணக்குகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் முடக்கினர்.

தொடர்ந்து தொழிலதிபரின் சிம் கார்ட் முடக்கப்பட்டது தொடர்பாக டெலிபோன் கம்பெனியிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது மெசேஜ் மூலம் தொழிலதிபரின் சிம் கார்டை மாற்றியதும் அதற்கு இமெயில் மூலம் ஒரு விண்ணப்பத்தை அனுப்பியிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலிஸார் தனிப்படை ஒன்றை அமைத்து தேடி வருகின்றனர்.