குனியமுத்தூர்: தர்மபுரியை சேர்ந்தவர் அபிமணி (வயது 37). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் போத்தனூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அபிமணியின் அருகில் வந்தனர்.
அந்த வாலிபர்கள் அவரிடம் அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும் தங்களிடம் போன் இல்லை என்றனர். அபிமணி பரிதாபப்பட்டு அந்த வாலிபர்களிடம் போனை கொடுத்தார். செல்போனை பெற்று கொண்ட அந்த வாலிபர்கள் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கேட்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அபிமணி தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்தனர்.
உடனே அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து அபிமணி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.