கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றி சாதனை.!!

கோவையில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றி சாதனை. திட்டமிடலில் தெளிவாகவும், உயர் அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் சரக்குகள் ஏற்றம். பொதுவாக பயணிகள் செல்லும் விமானங்களில் குறைந்த எடை கொண்ட சரக்குகளை மட்டுமே கையாள முடியும். சமீபத்தில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன.

கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் என இரண்டு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படுகிறது. இத்தகைய விமானங்களில் ஒவ்வொரு முறையும் 168 பயணிகள் வரை பயணிப்பது வழக்கம். சில நாட்கள் பயணிகளின் இருக்கைகள் குறைவாக புக்கிங் செய்யப்படும். அதுபோன்ற நேரங்களில் சரக்குகள் சற்று கூடுதலாக ஏற்ற வாய்ப்பு கிடைக்கும்.

கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள்வைக்கும் பகுதியில் இடவாய்ப்பு சற்று அதிகம் கிடைத்தது. உடனடியாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அதிக சரக்குகளை ஏற்ற திட்டமிட்டனர். அன்றைய தினம் ஜவுளிப் பொருட்கள் மற்றும் தொழில் துறையில் பயன்படுத்தப்படும். பொருட்கள் ஏற்றுமதிக்காக ஷார்ஜாவுக்கு புக்கிங் செய்யப்பட்டு இருந்தன. வழக்கமாக 3.5 டன் வரை மட்டுமே ஏற்றப்படும். இந்த நிலையிலே, 5 டன் வரை சரக்குகள் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டன. கோவை விமான நிலையத்தில் மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 150 டன், வெளிநாட்டு பிரிவில் 800 டன் முதல் 850 டன் வரை என மாதந்தோறும் சராசரியாக 950 டன் முதல் 980 டன் வரை சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. காய்கறிகள், ஜவுளிப் பொருட்கள், வார்ப்படம், வால்வு உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்து சேர்த்து 1,000 டன்னுக்கு அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன.