ரூ.3500 லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் .இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலம் கோலார் பட்டியில் உள்ளது. அதை உட்பிரிவு செய்ய முடிவு செய்தார். அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்ய கடந்த 2006 – ஆம் ஆண்டு அப்போதைய நில சர்வேயர் சண்முகசுந்தரத்திடம் விண்ணப்பித்தார். அதற்கு சண்முகசுந்தரம் நிலத்தை உட்பிரிவு செய்யவும், ஆவணங்களை தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பவும் நந்த கோபாலகிருஷ்ணனிடம் ரூ 3500 லஞ்சமாக கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பணம் தர மறுத்தார்.பணம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை உட்பிரிவு செய்ய முடியும் என்று சண்முகசுந்தரம் கூறினார் .இது குறித்து நந்த கோபாலகிருஷ்ணன் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் வழங்கினர். அந்த ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்ட அவர் கடந்த 11-8- 2006ஆம் ஆண்டு கோமங்கலத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்து நில அளவையர் சண்முக சுந்தரத்திடம் ரூ.3500 லஞ்சமாக கொடுத்தார் அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன ரம்யா நிலத்தை உட்பிரிவு செய்வதற்கு ரூ. 3500 லஞ்சம் வாங்கிய சர்வேயர் சண்முகசுந்தரத்துக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் , ரூ.10 ஆயிரம் அபராதமும் இதை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.