கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடையை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 44). இவர் அங்குள்ள பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென செந்தில் குமாரை தடுத்து நிறுத்தி குடிக்க பணம் கேட்டார். அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். உடனே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார். பின்னர் செந்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கை கடிகாரம் ஆகியவற்றை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் தப்பி சென்றார். இதுகுறித்து செந்தில் குமார் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்த லால் என்கிற சபீர் அகமது (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்த கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.