காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
கோவையை சேர்ந்த 19 வயதான இளம் பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒருவர் வாட்ஸ்-அப்பில் அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். அதை அந்த மாணவி கண்டுகொள்ளவில்லை.
மேலும் அந்த நபர், அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை காதலிக்கும் படியும் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, உன்னை யார் என்றே எனக்கு தெரியாது, பின்னர் எப்படி உன்னை காதலிக்க முடியும் என்று கேட்டு உள்ளார். அத்துடன் அவர் தொடர்பு கொண்டால் அதை அந்த மாணவி எடுத்து பேசுவதும் இல்லை. அவர் அனுப்பும் மெசேஜை பார்ப்பதும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த நபர் திடீரென்று அந்த மாணவியின் வாட்ஸ்-அப்புக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பினார். அதில் அந்த மாணவியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் சில ஆபாச வார்த்தைகளும் இடம் பெற்று இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியது வடவள்ளியை சேர்ந்த மனோஜ்குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மனோஜ்குமாரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் செல்போன் கடை நடத்தி வருவதும், அந்த மாணவி, தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து அவருடைய புகைப்ப டத்தை ஆபாசமாக சித்தரித்து மாணவிக்கும், அவருடைய உறவினர்களுக்கும் அனுப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.