கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பாலக்காடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும் குழியுமாக கிடந்தது. அப்போது அங்குள்ள குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி ஸ்கூட்டரில் வந்த அந்த வாலிபரிடம் சிரித்தபடி “சாரி ” மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். உடனே அந்த வாலிபர் மோதலை மறந்து விட்டு அந்த மாணவி தன்னிடம் சிரித்து தான் பேசுகிறார். அவரை மடக்கி விட வேண்டும் என்று நினைத்து அவரை பின் தொடர்ந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் மாணவியின் ஸ்கூட்டரின் முன் சென்று தடுத்து நிறுத்தினார். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார் அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மாணவியின்கையை பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கம் ஓடி வந்து அந்த வாலிபரை துரத்தினார்கள். அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கல்லூரி மாணவி குனிய முத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி யதில் மாணவிக்கு முத்தம் கொடுத்தது கோவை புதூர் ,சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது செரீப் ( வயது 32)என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு மகன்இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் விபத்து நடந்த போது அந்த மாணவி சிரித்தபடி பேசியதால் அதை தவறாக எடுத்துக் கொண்டு,அவரை பின் தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முகமது செரிப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். நடுரோட்டில் கல்லூரி மாணவியை முத்தம் கொடுத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது..!
