கோவையில் மோட்டார் சைக்கிள் திருடி வந்த வாலிபர்: துரத்தி பிடித்த காவலர்
திண்டுகல்லில் பயிற்சி உதவி ஆய்வாளராக வேலை செய்து வருபவர் அருண்குமார். இவர் தற்போது கோவை பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் அருண்குமார் உக்கடம் போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வெவ்வேறு இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பார்த்த உதவி ஆய்வாளர் தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினார். இதனால் அந்த வாலிபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்களில் ஒருவர் தனியாக சென்று மாயமானர். இதனை பார்த்த மற்ற வாலிபரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவி ஆய்வாளர் அந்த வாலிபரை துரத்தி சென்றார். மேலும் விடாமல் அந்த வாலிபரை துரத்தி மடக்கி பிடித்தார். பின்னர் உடனே அவர் அந்த இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரித்தார். அதில் அந்த இருசக்கர வாகனம் போத்தனூரை சேர்ந்த நபரி வாகனம் என்பதும் அவரை தாக்கி 3 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மடக்கி பிடித்த வாலிபரை உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர் காளப்பட்டியை சேர்ந்த ரத்திஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும் போத்தனூரில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி வந்ததால் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உக்கடம் வந்து அந்த வாலிபரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தை திருடி வந்த வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளர் அருண்குமாரை பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டினர்.