ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலைவாய்கரைவாடியை சேர்ந்த தர்மராஜ் மகன் சிவமுனி, 37 இவர் கீழக்கரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் பலருக்கு பண உதவி செய்து வந்தார். அப்பணத்தை திரும்ப வசூலிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு கீழக்கரை கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள ஜெட்டி பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கரை ஒதுங்கிய உடலை மெரைன் போலீஸ் எஸ் ஐ செல்வராஜ், முதல் நிலை உதவியாளர் ஐயனார் ஆகியோர் கைப்பற்றி கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் மனைவி கூறுகையில் ;-
தனது கணவருக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் விரக்தி அடைந்து கடலில் குதித்து கொண்டதாக சொல்லப்படுகிறது. பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிவமுனி எழுதிய கடிதத்தை கண்டறிந்து காவல் நிலையத்தில் கொடுத்துள்ளோம் .இதன்படி 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவமுனி மனைவி சண்முகபிரியா புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஊர்மக்கள் அனைவரும் கீழக்கரை காவல் நிலையத்துக்கு சென்று கடிதத்தில் எழுதிய நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் முடியாத பட்சத்தில் ஏற்கனவே கொடுத்த வழக்கில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். காவல்துறை அதிகாரிகள் விசாரணை அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கைப்பட எழுதியது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது அதன் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஊர் மக்கள் அமர்ந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விசாரணையின் அடிப்படையில் உங்கள் கோரிக்கையை 7 நாட்களுக்குள் சரி செய்து தருவதாக கூறினார்.