சரக்கு வாகனத்தை துரத்தி காய்கறி மூட்டையை பறிக்க முயன்ற காட்டு யானையால் பரபரப்பு.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே  இரவு சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. சோதனை சாவடி பகுதியில் வாகன தணிக்கை நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டு யானை காய்கறி மூட்டைகள் பாரம் ஏற்றிய சரக்கு வாகனத்தின் பின்புறம் சென்று வாகனத்திலிருந்து தும்பிக்கையால் காய்கறி மூட்டைகளை பறிக்க முயன்றது. ஆனால் வாகனத்தில்  இருந்து காய்கறி மூட்டைகளை காட்டு யானை தனது தும்பிக்கையால் எடுக்க முடியவில்லை. இதற்கிடையே யானை வாகனத்தின் பின்புறம் காய்கறி மூட்டைகளை எடுக்க முயன்றதை கண்ட வாகன ஓட்டுனர் சரக்கு வாகனத்தை மெதுவாக முன்நோக்கி செலுத்தி யானையிடமிருந்து லாவகமாக தப்பினார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.