கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீலாம்பதி என்ற பழங்குடி கிராமம் உள்ளது.இங்கு வசிப்பவர் பொன்னுசாமி ( வயது 51 )விவசாயி. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானை ஒன்று நீலாம்பதி கிராமத்துக்குள் புகுந்தது. அந்த காட்டு யானை பொன்னுச்சாமியின் குடிசை வீட்டு முன் வந்து நின்றது. காட்டு யானை குடிசை வீட்டை சேதப்படுத்தி உள்ளே புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த பொன்னுசாமியை தாக்கி தூக்கி வீசியது .இதில் பொன்னுசாமி படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இதை தொடர்ந்து அந்த காட்டு யானை வன பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு அந்த கிராமத்தினர் தகவல் கொடுத்தனர்.வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் . இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த விவசாயியை கொன்ற காட்டு யானை..
