ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் : வெளிநாடு தப்பிச் சென்று மீண்டும் வந்த அவரை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைப்பு !!!

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் : வெளிநாடு தப்பிச் சென்று மீண்டும் வந்த அவரை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைப்பு !!!

 

கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் வெளிநாடு தப்பிச் சென்று மீண்டும் விமானம் மூலம் கொச்சி திரும்பிய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் விமான நிலையத்தில் வைத்து அப்பெண்ணை மடக்கி பிடித்து நேற்று இரவு முழுவதும் கோவையில் வைத்து இருந்தனர். பின்னர் இன்று காலையில் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா ( 32) வயதான இவர் தன் உடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் தான் புதிதாக தொழில் துவங்கி உள்ளதாகவும் அதில் முதலீடு செய்தால் மாதம் தோறும் முதலீட்டிற்கான லாபத் தொகையை தருவதாகவும் கூறி உள்ளார். அவரது பேச்சை நம்பிய பலரும் லட்சக் கணக்கில் பணத்தை முதலீடாக செலுத்தி உள்ளனர். ஒவ்வொருவருக்கும் முதல் மாதம் மட்டும் லாபத் தொகை என்ற பெயரில் சிறிதளவு பணத்தை கொடுத்த அந்த பெண் பின்னர் முதலீடு செய்த நிறுவனத்தில் தான் இழப்பை சந்தித்ததாகவும் செலுத்திய பணத்தை விரைவில் தருவதாகவும் கூறியபடியே கோவையில் இருந்து திடீரென தலைமறைவாகி உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மதுமிதாவை பாதிக்கப்பட்டவர்கள் தேடி வந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் இதே போன்று துபாயிலும் மோசடியில் ஈடுபட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க இருப்பது தெரிய வந்தவுடன் துபாயில் இருந்து விமான மூலம் கேரளாவிற்கு வந்து உள்ளார் அவர் கேரளாவிற்கு வரும் தகவல் தெரிந்த துபாயில் வசிக்கும் சிலர் ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவில் மதுமிதாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு தகவல் அளித்து உள்ளனர் அந்த தகவலின் அடிப்படையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை விமான நிலையத்திற்கு அனுப்பிய பாதிக்கப்பட்டவர்கள் அங்கு இருந்து மதுமிதாவிற்கு உதவுவதாக கூறி அவரை காரில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்து உள்ளனர். தொடர்ந்து நேற்று இரவு பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் மதுமிதாவை கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக சென்று உள்ளனர் ஆனால் காவல் நிலையத்தில் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள இயலாது நாளை காலை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு கூறவே விடிய, விடிய அப்பெண்ணுடன் ஐந்து கார்களில் வந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலைய வளாகத்திலேயே இருந்து உள்ளனர். இதனிடையே காரில் இருந்து அதிகாலையில் திடீரென தப்பிய மதுமிதா சாலையில் இறங்கி ஓட முயற்சி செய்தார். மீண்டும் அவரை விரட்டிப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அப்பெண்ணை காரில் வைத்து கோவை பந்தய சாலை பகுதியிலேயே வட்டம் அடித்து வந்து உள்ளனர். தொடர்ந்து அப்பெண்ணை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் மோசடியில் ஈடுபட்ட அப்பெண்ணை ஒப்படைத்தனர். வென்சுரா என்ற ஆன்லைன் தளத்தில் தான் முதலீடு செய்து தொழில் துவங்கியதாகவும் சுமார் 20 பேரிடம் இரண்டு கோடி ரூபாய் வரை பணம் பெற்று தொழில் இழப்பு ஏற்பட்டதால் துபாய் சென்றதாகவும் பொதுமக்களிடம் வசூலித்த பணம் துபாயில் சென்று முதலீடு செய்து முழுமையாக பணத்தை இழந்து விட்டதாகவும் அதனால் தற்போது திரும்பி வந்து உள்ளதாகவும் கூறிய மதுமிதா பணத்தை தற்போது திருப்பி தர இயலாது எனவும் அதற்கான கால அவகாசம் கேட்க இருப்பதாகவும் கூறினார். மேலும்

ஒரு லட்சம் ரூபாய்க்கு இருபதாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் தாங்கள் முதலீடு செய்ததாகவும் துவக்கத்தில் பணம் தந்த மதுமிதா பின்னர் பணம் தராமல் இழுத்து அடித்ததாகவும் கூறிய பாதிக்கப்பட்டவர்கள் பணம் கேட்டு நெருக்கடி தந்த போது தலைமறைவாகியதாகவும் தெரிவித்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட மதுமிதாவை தாங்களாவே பிடித்து பந்தைய சாலை காவல் நிலையத்தில் நேற்று இரவே ஒப்படைக்க சென்றும் போலீசார் விடிய, விடிய தங்களை அலைக்கழித்ததாகவும் தெரிவித்தனர்.

மோசடியில் ஈடுபட்ட மதுமிதாவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.