கார் விற்பதாக கூறி நூதன முறையில் 31 லட்ச ரூபாய் மோசடி : மூன்று பேருக்கு போலீஸ் வலை
சென்னை இ.சி.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் பாபு. இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக இவர் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி விற்பது வழக்கம். இவரிடம் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் சொகுசு கார்கள் சிலவற்றை வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கி விற்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரமணியன் கோவையைச் சேர்ந்த வர்ஷினி என்பவருக்கு சொந்தமான பென்ஸ் கார் ஒன்று 32 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு இருப்பதாக தெரிவித்தார். மேலும் பொள்ளாச்சிக்கு வந்து காரை பணம் கொடுத்து எடுத்துச் செல்லலாம் என கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து மோகன் பாபு தனது டிரைவர் பிரவீன் என்பவரை அனுப்பி காரை பார்த்து விபரங்களை கூறும்படி சொல்லி இருந்தார். பின்னர் பொள்ளாச்சி வந்த டிரைவர் பிரவீன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள ஹோட்டலில் வைத்து காரை பார்த்தனர். தொடர்ந்து பிரவீன் தனது உரிமையாளர் மோகன் பாபு விடம் அனைத்தும் சரியாக இருப்பதாக கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து மோகன் பாபு காரின் உரிமையாளர் வர்ஷினி என்பவரின் வங்கி கணக்கிற்கு 31 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். இதன் பின்னர் பேசிய சுப்பிரமணியன் கார் தற்சமயம் லோனில் இருப்பதாகவும் வங்கியில் அதற்குரிய தொகையை செலுத்தி சில நாட்களில் காருக்குரிய ஆவணங்கள் அனைத்தையும் வங்கியில் இருந்து பெற்று அனுப்பி வைப்பதாகவும் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து டிரைவர் பிரவீன் காரை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார். அதன் பிறகு பலமுறை மோகன் பாபு காரை விற்ற வர்ஷினி மற்றும் அவரது மேலாளர் நவீன் குமார் மற்றும் காரை வாங்கி கொடுத்த சுப்பிரமணியன் ஆகியோரை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் சரியான முறையில் பதில் அளிக்காமல் தொடர்ந்து காருக்குரிய ஆவணங்களையும் தராமல் ஏமாற்றி வந்தனர். இதை தொடர்ந்து மோகன் பாபு சிங்காநல்லூர் காவல் நிலத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வர்ஷினி, நவீன் குமார், சுப்பிரமணியன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.