மின் அட்டையுடன் ஆதார் இணைப்பு விவகாரம் : 6 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

மின் அட்டையுடன் ஆதார் இணைக்க கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு 6 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில்,’ ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை எனவும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும். ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எந்தவொரு அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டதாக கூறி கடந்த டிசம்பர் 22ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்,

அந்த மனுவை, விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் அரசின் கொள்கை சார்ந்த ஒன்று, அதில் நாங்கள் தலையிட முடியாது என தெரிவித்தது. மேலும் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதினால் பயனாளர்களுக்கு அது பாதுகாப்புதான்,
மேலும் அரசின் நலதிட்டம் அல்லது மானியம்சரியான நபருக்கு கிடைக்கிறதா என்பதை இதன் மூலம் கண்டறியவே இந்த முறை என அரசு கூறுகிறது. மேலும் இது கொள்கை முடிவு எனவும் அரசு விளக்கியுள்ளது.

எனவே இது நல்லது தானே என தெரிவித்தத்தோடு, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி பிப்ரவரி 13ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்ததது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் மின் அட்டையுடன் ஆதார் இணைக்க கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு 6 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.