மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை அடுத்த பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கலைவாணன். இவர் மீது திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வம் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இதேபோல் பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் இவர் மீது உள்ளன. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பெரம்பூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரௌடி கலைவாணன் தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. வெடிகுண்டு தயாரித்த போது திடீரென்று விபத்து ஏற்பட்டு வெடித்ததில் இரண்டு கைகளும் சிதைந்தது. இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர்.
இரண்டு கைகளில் விரல்கள் சிதைந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறப்பு புலனாய்வு காவல் துறையினர் யாருக்காக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது? ஏற்கனவே வெடிகுண்டு தயாரித்து ரௌடி கும்பலுக்கு விநியோகம் செய்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..