சொத்து குவிப்பு வழக்கு… எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம் அதிரடி..!

டெல்லி: தம் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டார்; வருமானத்துக்கு அதிகமாக ரூ. 58 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்குகள். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.

எஸ்பி வேலுமணி மீது கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்தார்; இந்த முறைகேடுகள் மூலம் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 58 கோடி சொத்து குவித்தார் என வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி மீது வழக்குகள் பதிவாகின. இந்த வழக்கில் எஸ்பி வேலுமணி தரப்பில் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தாவே என டெல்லியில் இருந்து சீனியர் வழக்கறிஞர்கள் வரவழைக்கப்பட்டனர். திமுக, அறப்போர் இயக்கம் சார்பில் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு சார்பாக மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி இருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில், அறப்போர் இயக்கத்தின் சார்பில் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம் வாதிடப்பட்டது. திமுக ஆர்.எஸ்.பாரதி சார்பில், புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் எஸ்பி வேலுமணி தரப்பில், தம் மீதான முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்துவிட்டது. 2020-ம் ஆண்டிலேயே எந்த நடவடிக்கையும் தேவை இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது என வாதிடப்பட்டது.எஸ்.பி. வேலுமணி தரப்பு வாதிடும்போது, தன் மீதான முறைகேடுகளை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை, நடவடிக்கை தேவையில்லை என 2020ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டதாக வாதிடப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தது; ஆனால் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எஸ்பி வேலுமணி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வலியுறுத்தும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் இன்று எஸ்பி வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இது எஸ்பி வேலுமணிக்கு கடும் பின்னடைவாகும்.