புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழலில் மூளையாக செயல்பட்டவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டுக்கான டெல்லி அரசின் கலால் கொள்கை,மதுபான வியாபாரிகளுக்கு உரிமம்வழங்க அனுமதித்ததாகவும் அதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் சில விற்பனையாளர்களுக்கு சாதகமாக இந்த கொள்கை வகுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு நடந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை பணப் பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், சில தொழிலதிபர்களை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சதி செய்ததாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இதுவரை 9 முறை கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அது சட்டவிரோதம் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார்.
கவிதா கைது: இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையதாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை அமலாக்கத் துறை சமீபத்தில் கைது செய்தது. அவரை மார்ச் 23-ம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைதுசெய்தனர். டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அமலாக்கத் துறை வாதம்: சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்எஸ்.வி. ராஜு தனது வாதத்தில் கூறியதாவது:
டெல்லி மதுபான கொள்கையை உருவாக்குவதில் கேஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து மதுபான ஊழலில் முக்கியபுள்ளியாக கேஜ்ரிவால் இருக்கிறார்.
இந்த வழக்கில் முக்கிய சதிகாரரே அவர்தான். டெல்லி மதுபான கொள்கையை வகுத்துசெயல்படுத்தியதற்காக சவுத் குழுமத்திடம் இருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.
பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக சவுத் குழுமத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் இருந்து ரூ.100 கோடிகேட்டுள்ளார். ரூ.600 கோடி அளவுக்கு அதில் ஊழல் நடந்துள்ளது.
கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ரூ.45 கோடி பணம்ஹவாலா வழிகளில் இருந்துவந்த லஞ்சம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலமும், சாட்சிகளின் வாக்குமூலமும் அழைப்பு விவரப் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி மதுபான கொள்கைஊழலில் மூளையாக செயல்பட்டவரே முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று முதல் விசாரணை: கேஜ்ரிவாலை 10 நாட்கள்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கேஜ்ரிவாலிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் 28-ம் தேதி வரை விசாரணை நடத்தலாம் என்று அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் கேஜ்ரிவாலிடம் அமலாக்கத் துறையினர் விசாரணையை தொடங்க உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.