திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் லால்சலாம் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் படமான லால்சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக திருவண்ணாமலை, நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லால்சலாம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
பின்னர் நேற்று செஞ்சி பகுதியில் லால்சலாம் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார் என வெளிவந்த தகவல் பக்தர்களிடையே காட்டுத் தீ போல் பரவியது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க பக்தர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படக் குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்களால் பாதுகாப்புடன் அண்ணாமலையார் கோவிலில் இருந்து வெளியே வந்து தனது காரில் ஏறி நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார்.