பஞ்சாப் பகுதியை காப்பதற்கு கூடுதல் படைகள் தேவை – பிஎஸ்எஃப் வேண்டுகோள்..!

பாகிஸ்தானையொட்டிய பஞ்சாப் எல்லைப் பகுதியைக் காப்பதற்கு கூடுதல் படையினர் தேவை என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கோரியுள்ளது.

இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பஞ்சாப் பகுதி 500 கி.மீ. தூரத்துக்கும் அதிகமானதாகும். இப்பகுதியைக் காக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் 20 பட்டாலியன் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாபில் எல்லை மாவட்டங்களான அமிருதசரஸ் மற்றும் தார்ன் தரன் ஆகிய இடங்களில் கடந்த 2019-20ஆம் ஆண்டில் ஆளில்லா சிறிய ரக உளவு விமானங்களின் (ட்ரோன்) அச்சுறுத்தல் தொடங்கியது. எல்லைக்கு அப்பால் இருந்து ட்ரோன்கள் மூலம் பஞ்சாப் எல்லைக்கு போதைப் பொருள்களும், வெடிபொருள்களும் அனுப்பப்படுகின்றன. பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி பஞ்சாப் எல்லைப் பகுதியைக் காப்பதற்கு மேலும் ஒரு பட்டாலியன் படையினரை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசை எல்லைப் பாதுகாப்புப் படை கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் உயரதிகாரி ஒருவர், பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த ஆண்டில் இதுவரை பஞ்சாப் எல்லைப் பகுதியில் 120 ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 107 ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாப் எல்லையையொட்டிய ஆற்றுப் பகுதிகளைக் காக்கவும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு கூடுதல் படையினர் தேவைப்படுகின்றனர். பஞ்சாப் எல்லையில் ராவி மற்றும் சட்லஜ் நதிகள் மீது 48 கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் மதகுகளை எல்லைப் பாதுகாப்புப் படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது தவிர, தனது உளவுப் பிரிவுக்கும் கூடுதல் பணியாளர்கள் தேவை என்று எல்லைப் பாதுகாப்புப் படை கோரியுள்ளது..