டெல்லி புதிய முதல்வராக அதிஷி செப்.21-ல் பதவியேற்கிறார்..!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றால் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

தற்போது உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆனாலும் முதல்வர் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஆளுநரை சந்தித்து புதிய முதல்வராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அதிஷி வழங்கினார்.

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வர், அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக ஜனாதிபதிதான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லி துணை ஆளுநர், ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை அனுப்புவார்.

இதன்படி டெல்லியில் வரும் 21-ந் தேதி புதிய முதல்வராக அதிஷி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்க ஜனாதிபதிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். இதன்படி ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னர் அதிஷியும் அவரது அமைச்சரவையும் பதவியேற்கும்; சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும். ஆகையால் அடுத்த 6 மாத காலத்துக்கு மட்டுமே அதிஷி முதல்வராக பதவி வகிப்பார்.