கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் நாள்தோறும் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து அவர்களிடம் கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறியும், விளம்பரங்களை காட்டியும், அதில் பரிசு விழுந்தால் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியும் வடமாநிலத்தைச் சார்ந்த 7 பேர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த விளம்பரத்தில் பரிசு பெற்றால் ஆண்டுதோறும் 7 நாட்கள் என 10 ஆண்டுக்கு உலகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் என கூறியுள்ளனர். இதற்கு ஒரு நபருக்கு ரூ. 1,75,000 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான ராஜ்குமார் என்பவரிடமும் இந்த வடமாநில கும்பல் பிரையண்ட்
பூங்கா அருகே அணுகியுள்ளது. இந்த வடமாநில கும்பல் பேசிய கவர்ச்சிகரமான வார்த்தையில் மயங்கிய ராஜ்குமார், உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் ஆசையில் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் 2 நபர்களுக்கு ரூ. 3,50,000 கட்டணமாகவும் செலுத்தியுள்ளார்.
சில நாட்கள் கழித்து இவர்களை தொடர்பு கொண்டபோது வட மாநில கும்பல் கொடுத்த அலைபேசியும் வேலை செய்யவில்லை, வெப்சைட்டும் முடங்கியது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜ்குமார் உடனடியாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வட மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 நபர்கள் சில மாதங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும், கொடைக்கானல் பேருந்து நிலைய பகுதியில் வீடு மற்றும் பல அலுவலகங்களை வாடகைக்கு எடுத்து தங்கி பல சுற்றுலாப் பயணிகளிடம் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஹரியானாவை சேர்ந்த அணில் அஜய் மேக்சா(29), மும்பை தானேவை சேர்ந்த சுருதி(29), மும்பையை சேர்ந்த சாவாஜ் (30), ஒசாமா (25), ராகுல்சா (25), தெற்கு டெல்லியை சேர்ந்த சிவா (22) உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.