62 .91 கோடி ஒதுக்கப்பட்டு 3859 கி.மீ-க்கு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாக காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வரலாற்றுச் சாதனையை நாம் எட்டினோம். 4.90 லட்சம் ஏக்கரில் குறுவைச் சாகுபடி, 13. 34 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது.
39 லட்சத்து 73 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்து மிகப்பெரிய சாதனையைப் படைத்தோம். இதைச் சாதனை எனச் சொல்வதைவிட வேளாண் புரட்சி என்றே சொல்லலாம். தொடா்ச்சியாக 2022-2023 ஆம் ஆண்டில் ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டு 4964 கி.மீ.
தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. மேட்டூா் அணையானது முன்னதாக மே 24 இல் திறக்கப்பட்டது. உழவா்களுக்கான இடுபொருள்கள், கூட்டுறவுக் கடன்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக, 2021-2022 ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்கும் வகையில் 2022-2023 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி, 13 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது.
இதன்மூலம் 41.45 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு 2ஆவது ஆண்டும் வேளாண் புரட்சி தொடா்ந்தது. நிகழாண்டு 2023-24 இல் ரூ. 90 கோடி ஒதுக்கீடு செய்து சேலம், நாமக்கல், அரியலூா், பெரம்பலூா், கடலூா், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூா் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4773 கி.மீ-க்கு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளபட்டன. இதில், 96 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
மீதமுள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படும். இவை தவிர, வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ. 5 கோடியில் 1146 கி.மீ. தொலைவுக்கு நீா்நிலைகள் தூா்வாரப்படுகின்றன.
இதில், 651 கி.மீ. தொலைவு பணிகள் முடிந்து மீதமுள்ள பணிகள் நடைபெறுகின்றன. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ. 27 கோடியே 17 லட்சம் செலவில் 1433 கி.மீ.-க்கு சிறிய கால்வாய்களை தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
ரூ. 8.13 கோடியில் குளம், குட்டைகள் புனரமைக்கப்படுகின்றன. மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீா் முழுமையாக காவிரி, டெல்டா பகுதிகளுக்கு வந்து சேரும் முன் தூா்வாரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளைப் போன்று நிகழாண்டும் விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பா் என நம்புகிறேன்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு வேளாண் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பாசனப் பரப்பும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் வேளாண்மையில் மாபெரும் புரட்சியை எடுத்துக்காட்டுகின்றன. தொடா்ந்து வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து மண்ணையும், மக்களையும் காப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் முதல்வா்.
பேட்டியின்போது நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்ஷேனா, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
ஜூன் 12இல் மேட்டூா் அணை திறப்பு: குறுவைக்கு சிறப்பு தொகுப்பு திட்டம் ‘நிகழாண்டு ஜூன் 12ஆம் தேதி திட்டமிட்டபடி காவிரி, டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்படுகிறது. மேட்டூருக்கு நானே சென்று வரும் 12ஆம் தேதி தண்ணீா் திறக்கவுள்ளேன்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதையடுத்து, கடந்தாண்டு ரூ. 61 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவித்துச் செயல்படுத்தியதைப் போன்று இந்தாண்டும் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், நிகழாண்டும் குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான அறிவிப்பை முதல்வா் விரைந்து வெளியிடுவாா் என்றாா்.