சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
மறைந்த நடிகர் மாரிமுத்து தனது ஆரம்ப காலங்களில் வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். பிறகு இயக்குநர் வஸந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இயக்குநர் சீமானிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மாரிமுத்து, அதன் பின்னர், ‘ கண்ணும் கண்ணும்’, ‘ புலிவால்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்னர் நடிக்கத் துவங்கிய மாரிமுத்து, பரபரப்பான குணசித்திர நடிகராக வலம் வந்தார். ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள நடிகர் மாரிமுத்துவுக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மரணம் குறித்து அவர் முன்பு பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அடிக்கடி மனதில் வலி வருகிறது. அது நெஞ்சுவலியா அல்லது மன வலியா எனத் தெரியவில்லை. ஏதோ கெட்டது நடக்கப் போகிறது எனத் தோன்றுகிறது’ என அந்த வீடியோவில் பேசுகிறார் மாரிமுத்து.அவர் சீரியலில் பேசிய வசனம் அவருக்கு உண்மையிலேயே நிகழ்ந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணத்தை முன்பே கணித்துள்ளார் மாரிமுத்து என ரசிகர்கள் இந்த காணொலியை பகிர்ந்து தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.