உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அடுத்த வாரம் வர உள்ளது.
கடந்த ஜூலை 11- ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது என்று, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த உயா்நீதிமன்றம், “கட்சி விதிகளுக்கு உள்பட்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம் என்றும், பொதுக்குழுவில் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று தீர்ப்பளித்தது.
தனி நீதிபதி அமா்வு பிறப்பித்த இந்த உத்தரவை எதிா்த்து, கடந்த ஜூலை 15 -ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “ஒருங்கிணைப்பாளா் கையொப்பம் இல்லாமல், உரிய அழைப்புக் கடிதம் இல்லாமல் இந்தப் பொதுக்குழு நடந்துள்ளது. எனவே, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜூலை 11-இல் நடைபெற்ற பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்னும் பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகள் பறிப்பு, ஒரே மக்களவை எம்.பி கட்சியிலிருந்து நீக்கம், விதிகள் மாற்றம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி வழக்கை விரைந்து விசாரிக்க ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஓபிஎஸ் வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே ஓபிஎஸ் மனுவில் எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.