அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை..!

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ.,வும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் கே அர்ஜூனன் பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.22.43 கோடி சொத்து குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மீது கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக
சென்னை மற்றும் கோவையை சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6 மணி முதல் கோவை சுண்டாக்காமுத்தூர் ரோடு திருநகர் 3வது தெருவில் உள்ள அவரது வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த அம்மன் அர்ஜூனன், அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 13 மணி நேரத்துக்கு மேல் நடந்து முடிந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இவ்வளவு வருவாய் வந்தது எப்படி, 2016ம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பும், தற்போது சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்தது எப்படி, பதவி காலத்தை தவறாக பயன்படுத்தி சொத்து குவித்துள்ளீர்களா என பல்வேறு கேள்விகளை போலீசார் அவரிடமும், அவரது குடும்பத்தினரிடம் கேட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே போலீசார் அம்மன் கே அர்ஜூனன் எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

எம்எல்ஏ அம்மன் கே அர்ஜூனன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது 22 கோடியே 43 லட்சத்து 97 ஆயிரத்து 869 ரூபாய் வரமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக புகார் வந்தது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. 13 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் பல்வேறு அவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதனை பறிமுதல் செய்து, ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால், கூடுதல் வழக்கு பதிவு செய்ய தேவை இல்லை. ஆவணங்களின் ஆய்வின் முடிவில், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்..