திமுகவை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொள்ளும் – இபிஎஸ் பேட்டி..!

க்கள் பிரச்சினைகளுக்காகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி மாறும் என்றார்.
பாஜகவுடன் மீண்டும் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமாக கூறிவந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் 4ஆம் தேதி கூட்டணி குறித்து 6 மாதங்கள் பின்பு பார்க்கலாம் என்றார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைவதற்கான தொடக்க புள்ளியா என்று கேள்வி எழுந்தது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படுமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் பிரச்சினைகளை அமித் ஷாவிடம் பேசியதாக டெல்லி விமான நிலையத்தில் ஈபிஎஸ் தெரிவித்தார். இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் நேரம் இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி மாறும் என்று தெரிவித்தார். மேலும் திமுகவை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

கல்வி மற்றும் 100 நாள் வேலை திட்ட நிதி பாக்கி, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு பற்றியும் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். இருமொழிக்கொள்கை பற்றி டெல்லியில் ஈபிஎஸ் வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அது பற்றியும் ஈபிஎஸ் பேசியுள்ளார்.

பின்னர் சென்னை வந்ததும் விமான நிலையத்தில் பேட்டி அளித்த ஈபிஎஸ்ஸிடம், தமிழகத்தில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவு செய்தது பற்றி கேட்டபோது அது அவர் விருப்பம் என்று தெரிவித்தார்.

அரசியலில் எந்தக் கட்சியும் ஒரு கூட்டணியில் நிலைத்திருக்க முடியாதென்றும், சூழலுக்குத் தகுந்த மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறிய ஈபிஎஸ், திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் பெற்ற தொடர் தோல்விகள், எடப்பாடி பழனிசாமியின் மனமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் இது மீண்டும் கூட்டணி உருவாவதற்கான அச்சாரம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனிடையே சென்னையில் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டி அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறியுள்ளார். அமித் ஷாவின் எக்ஸ் தளப் பதிவே அனைத்தையும் உணர்த்தும் என்றும் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.